நாமக்கல் நகரில் அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்டது.
இந்த கோவிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கிடையே நடப்பாண்டில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தன. தற்போது பணிகள் முடிவடைந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு, அதை சுற்றிலும் அலங்கார பந்தலும் போடப்பட்டு உள்ளது.
30-ந்தேதி மாலை 4 மணிக்கு ஆச்சார்ய அழைப்பு, இறைவனிடம் அனுமதி பெறுதல், வருண தீர்த்தம் புனிதப்படுத்தி வேள்வி சாலையை சுத்தப்படுத்துதல், திருமண் பரிசோதித்து எழுந்தருளல், திருமுலை இடுதல், பாலிகை தெளித்தல், அக்னி பகவானை கடைந்து எடுத்தல், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி தொடக்கம், கும்ப பூஜை (கலசபூஜை), திருமாண்பு ஈர்ப்பு செய்தல், கலசத்தில் இறைவனை அமரச் செய்தல், ஐம்பெரும் பூதங்களின் வேள்வி வளர்த்தல், அனுதின பெருவேள்வி, வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், அருட்பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று வருண தீர்த்தம், புனிதபடுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின பெருவேள்வி, மகாசாந்தி ஹோமம், அதிவாச ஹோமம், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை 7.15 மணிக்கு வருண தீர்த்தம், புனித படுத்துதல் அனுதின ஹோமம், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, தாரா ஹோமம் ஆகியவை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.