திருச்சி தெப்பக்குளம் அருகில் உள்ள அகில இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் அகில பாரத இந்து மகா சபா தமிழ்நாடு தலைவர் ராம. நிரஞ்சன் தலைமையில் இந்து மகா சபாவினா கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட வந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வர் கோவிலிலும், மானம்பாடியில் உள்ள நாகநாத சுவாமி கோவிலிலும் விரைவில் கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
ஐராவதேஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட குருக்கள் ஆகமத்திற்கும், சட்டத்திற்கும் புறம்பாக செயல்படுகிறார். வசதி படைத்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு யாகம் வளர்க்கிறார். எனவே இந்த கோவிலை தொல்லியல் துறை தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். இக்கோவிலுக்கு புதிய அர்ச்சகர் நியமிக்க வேண்டும். இதுபோல தஞ்சை பெரியகோவிலின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் செய்வோம் என்றும் ராம. நிரஞ்சன் கூறினார்.