கர்நாடகத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 5 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளன.
நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 34 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதாவது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மையம் என்ற அளவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 10 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரிந்துவிடும். நாளை மதியம் 12 மணி அளவில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதும் ஓரளவு தெரிந்துவிடும். கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆரம்பம் முதல் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலான கணிப்புகளில் தொங்கு சட்டமன்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
அதே நேரத்தில் அதிக சீட்டுகளை காங்கிரஸ் பெறும். அதற்கு அடுத்ததாக பாஜக இருக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 3வது இடத்திற்கு தள்ளப்படும். அந்த கட்சிக்கு சுமார் 25 சீட்டுகள் வரை கிடைக்கலாம் என கூறப்பட்டு இருந்தது.
ஆட்சி அமைக்க சில சீட்டுகளை தேவைப்படும் என காங்கிரசுக்கு சாதகமாகவே கருத்துகணிப்புகள் இருந்தபோதிலும், பாஜக மத்தியில் ஆட்சி செய்வதாலும், மதசார்பற்ற ஜனதா தளத்தை எளிதில் தன்வசப்படுத்திவிடலாம் என பாஜக நினைக்கிறது.
மஜத கட்சிக்கு என்று பெரிதான கொள்கையோ, லட்சியமோ இருப்பதாக தெரியவில்லை. குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது ஒன்றே அதன் லட்சியம். அந்த வகையில் தான் கடந்த தேர்தலிலும் சில காலம் முதல்வர் பதவியில் இருந்தார் மஜத தலைவர் குமாரசாமி. இந்த முறையும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கனவுலகில் வலம் வருகிறார் குமாரசாமி.
அவரது இந்த கனவு தான் பாஜகவின் பலம். எப்படியும் குமாரசாமி நமக்கு தான் என்ற நினைப்பில் உள்ளனர். ஆனால் குமாரசாமியை பாஜகவுக்கு விட்டுவிடக்கூடாது என்பதில் காங்கிரசும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. எனவே காங்கிரசும் , குமாரசாமியை வளைக்கிறது.
கருத்து கணிப்புகளில் கூறப்பட்டு இருப்பதுபோல தொங்கு சட்டசபை ஏற்பட்டால் எத்தகைய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் அதிரடி பணிகளில் இறங்கி விட்டனர். ஆள் பிடிக்கும் ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குமாரசாமியுடன் போனில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள் சிலர் , குமாரசாமியின் தந்தை தேவேகவுடாவிடம் பேசியதாக தெரிய வந்துள்ளது. பேரம் அதிகமாக இருந்தால் தேவகவுடா எதற்கும் சம்மதிப்பார் என்று பாஜக தலைவர்கள் சிலர் கருதுகிறார்களாம். அதன்படி பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
பாரதிய ஜனதா, காங்கிரஸ் தலைவர்கள் தன்னை வலைபோட்டு மடக்க முயல்வதை அறிந்ததும் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் இரவு அவசர அவசரமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். என்றாலும் வெளிநாட்டிலும் அவரை தொடர்பு கொண்டு பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நாளை அவர் பெங்களூரு திரும்ப உள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு கொடுப்பது என்ற விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக மதசார்பற்ற ஜனதா தளம் மூத்த தலைவர்களில் ஒருவரான தன்வீர் அகமது தெரிவித்தார். என்றாலும் குமாரசாமி இந்த விவகாரத்தில் இதுவரை நேரடியாக பதில் அளிக்கவில்லை.
இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியுடன், மத சார்பற்ற ஜனதா தளம் ரகசிய உடன்பாடும், ஒப்பந்தமும் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குமாரசாமி ஆதரவை பெற்று கூட்டணி ஆட்சி அமையும் என்பதை, எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான ஷோபா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. பாரதிய ஜனதா தனித்து ஆட்சி அமைக்கும்’ என்று கூறினார். அதுபோல காங்கிரஸ் கட்சியினரும், நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம். யார் தயவும் தேவை இல்லை என்று வெளியே கூறுகிறார்கள். அதே நேரத்தில் இருதரப்பினரும் மஜத கட்சியை என்ன விலை கொடுத்தேனும் தத்து எடுக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டனர்.