கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (49). இவர் பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதும் அதனை மொத்தமாக சேர்த்து வெளி சந்தைக்கு விற்பனைக்காக அனுப்புவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி நேற்று வழக்கம் போல் பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதற்காக கிராமங்களுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சேகரித்து பின்னர் மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த கிருஷ்ணமூர்த்தி மதிய உணவை சாப்பிட்டு பின்னர் வீட்டின் அருகில் உள்ள ஏற்கனவே சேகரிக்கப்பட்டு வந்துள்ள பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரித்துள்ளார். அப்போது விவசாய பயன்பாட்டிற்காக பூச்சி மருந்து அடிக்கும் பழைய இயந்திரத்தை பிரித்து அதில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தை உடைத்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மோட்டார் வெடித்துள்ளது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். இந்த இயந்திரம் வெடிக்கும் போது சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு சத்தம் கேட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி மல்லேஸ்வரி இவரது மகள் செல்வி சிவ முருகேசன் ஆகியோர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர் அப்போது கிருஷ்ணமூர்த்தி இரண்டு கால்கள் மற்றும் இரண்டு கைகள் சிதறி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார், தோகமலை இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.