கரூர் மாவட்டம் பணிக்கம்பட்டியில் இருந்து குளித்தலைக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வருகிறது. அந்த பஸ்சில் தான் பணிக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் பயணிக்க வேண்டியது உள்ளது. இதனால் அந்த பஸ்சில் படிக்கட்டுகளில் தொங்கியபடிதான் மாணவர்கள், குறிப்பாக மாணவிகளும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே கூடுதல் பஸ் இயக்க கோரி அந்த பகுதி மக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை வைத்தனர். ஆனாலும் கூடுதல் பஸ் இயக்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று காலை
சிவாயம் நெடுஞ்சாலையில் 50 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் ஊர் பொதுமக்களும் ஒரு பஸ்சை சிறைபிடித்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் பள்ளி குழந்தைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி உங்களுக்கு கூடுதலாக அரசு பேருந்து ஏற்படுத்தி தருகிறோம் என கூறிய நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் கலைந்து சென்றனர்.