கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை மணப்பாறை சாலை ரயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அவதி.
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் அருகே குளித்தலை- மணப்பாறை சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைந்துள்ளது.
நேற்று மதியம் இந்த ரயில்வே கேட் மீது லாரி மோதியது. இதனால் கேட்டில் பழுது ஏற்பட்டது.இந்த நிலையில் மாலை 3.45 மணியளவில் திருச்சி – கரூர் பயணிகள் ரயில் வந்ததையடுத்து கேட் மூடப்பட்டது.
ரயில் கடந்து சென்றதும் கேட்டினை திறக்க முற்பட்டபோது லாரி மோதியதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கேட் திறக்கவில்லை.இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதில் 108 ஆம்புலன்ஸ் வாகனம், கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று பைக் மற்றும் பேருந்தில் வீடு திரும்பியவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதியுற்றனர்.
மேலும் பேருந்தில் வந்த பொதுமக்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் ஆகியும் கேட் திறக்கப்படாததால் நடந்தே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.
ரயில்வே ஊழியர்கள் கேட்டில் ஏற்பட்ட பழுதினை சரி செய்த பின்னர் மாலை 6 மணி அளவில் கேட் மீண்டும் திறக்கப்பட்டது.