கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூரில் சிம்மபுரீஸ்வரர் சமேத சுகந்த குந்தளாம்பிகை கோவில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கும் மேல் மிகவும் பழமை வாய்ந்த காவேரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கோவிலில் பங்குனி பெருந்திருவிழாவைமுன்னிட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. சுவாமி உற்சவர், அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் ரிஷபம்,
கேடயம், ஷேசம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா கண்டனர்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாணம் உற்சவமும், நேற்று மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடபுரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று பங்குனி பெருந்திருவிழா முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமி உற்சவர் மற்றும் அம்பாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
சுவாமி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹரஹர மகாதேவா, ஓம் நமச்சிவாயா என நாமங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுங்கிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.