கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியின் 10வது வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்சிஸ்ட் கம்யூ) .
இவரது கணவர் நாகராஜ், மகன் விக்னேஷ் இருவரும், கரூர் தான்தோன்றி மலையில் உள்ள தங்களது ஹார்டுவேர் கடையில் பணி முடிந்து நேற்று இரவு பஸ்சில் கிருஷ்ணராயபுரம் வந்து அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
பிச்சம்பட்டி வாய்க்கால் பாலத்தில் வந்தபோது, சாலையின் நடுவே ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் மது போதையிலும், கஞ்சா போதையிலும் இருந்துள்ளனர். நாகராஜின் இருசக்கர வாகனத்தை மறித்து போதை நபர்கள் தகராறு செய்துள்ளனர்.
அப்போது நானும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவன் தான் என்று நாகராஜ் கூறிவிட்டு சென்றுள்ளார்.அப்போது போதை கும்பலில் இருந்த ஒரு இளைஞர் அருகில் இருந்த மேலும் சிலரை அழைத்துக்
கொண்டு சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த நாகராஜ் மற்றும் அவரது மகன் விக்னேஷின் இருசக்கர வாகனத்தை மறித்து பீர் பாட்டிலால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் நாகராஜன், விக்னேஷ் இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது சாலையில் மற்ற இருசக்கர வாகனங்கள் வருவதை பார்த்த போதை நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
சாலையில் சென்றவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு கோவக்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தந்தை, மகன் இருவரும் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போதைக்கும்பலை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.