கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் பெரியசாமி (50). இவர் 12ஆம் வகுப்பு படித்துள்ளார். பிஎஸ்சி படிப்பை பாதியில் நிறுத்திய இவர் உரிய மருத்துவம் படிக்காமல் நெய்தலூர் காலனி பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு எடுத்து கிளினிக் நடத்தி வந்துள்ளார். அப்பகுதியில் பொதுமக்களின் தொடர் புகார்களுக்கு இடையே கிளினிக்கை காலி செய்துவிட்டு தற்போது தனது வீட்டில் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து குளித்தலை அரசு மருத்துவமனை மருத்துவர் திவாகர் அளித்த புகாரின்பேரில் குளித்தலை இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன், மருத்துவ ஆய்வாளர் மாசேதுங், நங்கவரம் தெற்கு விஏஓ சசிகலா ஆகியோர் புரசம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். இதில் அவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலி மருத்துவர் பெரியசாமியை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து பொருட்கள், ஊசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குளித்தலை நடுவர் நீதிமன்றம் நீதிபதி தினேஷ்குமார் முன்பு ஆஜர்படுத்திய பின்னர் குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
