திருச்சி ஜி கார்னர் மைதானம் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகளை கொடுத்த இடம். 2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன் இந்த இடத்தில் தான் ஜெயலலிதா கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து அதிமுக 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தது.அதுபோல, 2013ல் ஜி கார்னரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தான் மோடி பேசினார். அதைத்தொடர்ந்து அவர் 2014ல் பிரதமர் ஆனார்.தொடர்ந்து 2வது முறையாக பிரதமராக இருக்கிறார்.
2015ல் இதே மைதானத்தில் தான் ஜி.கே. வாசன், தமாகாவை மறு தொடக்கம் செய்து மாநாடு போட்டார். மாநாடு முடிந்ததும் கட்சி கரைந்தே போய்விட்டது. இப்படி ஜி கார்னர் பலரை அரியணைக்கு ஏற்றியும் உள்ளது. பலரை கரைத்தும் விட்டு உள்ளது.
அப்படிப்பட்ட மைதானத்தில் வரும் 24ம் தேதி அதிமுக ஓபிஎஸ் அணி மாநாடு போட்டு உள்ளது. இந்த மாநாடு மூலம் தங்கள் பலத்தை காட்ட இருப்பதாக ஓபிஎஸ் கூறி வருகிறார். இந்த மாநாட்டு பந்தலுக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. அதைத்தொடர்ந்து மைதானம் முழுவதும் பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
24ம் தேதி மாநாடு என ஓபிஎஸ் அறிவித்த நிலையில் அதைத்தொடர்ந்து எந்த பணிகளும் நடைபெறாததால் மாநாடு தள்ளிப்போகலாம் என அனைவரும் நினைத்த நிலையில் இப்போது பந்தல்கால் முகூர்த்தம் குறித்து ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் இன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சில பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து தகவலை சொல்லி இருக்கிறார். மாநாடு பற்றிய செய்தியை அறிவிக்கும் முன்னாள் அமைச்சர் அதை ஏன் சில பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்து ரகசிய பிரஸ் மீட் கொடுத்தார் என்பது தெரியவில்லை.