தமிழ்நாட்டில் பாஜகவும் மக்களவை தேர்தலுக்கு ஆயத்தப்பணிகளை தொடங்கி விட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பாஜக சார்பில் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில் மத்திய சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டும் தலா இரு ஒருங்கிணைப்பாளர்களும், மற்ற தொகுதிகளுக்கு தலா ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தென் சென்னை தொகுதி ஒருங்கிணைப்பாளராக கரு. நாகராஜன், தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளராக சசிகலா புஷ்பா, கன்னியாகுமரி ஒருங்கிணைப்பாளராக மீனாதேவ் கோவை ஒருங்கிணைப்பாளராக செல்வக்குமார், காஞ்சிபுரம் ஒருங்கிணைப்பாளராக கே.டி. ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனத்தை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அண்ணாமலை தலைவராக பதவி ஏற்றதும், 2021ம் ஆண்டு கே. டி. ராகவன் குறித்த ஒரு வீடியோ வெளியானது. இதனால் பாலியல் குற்றச்சாட்டு அவர் மீது கூறப்பட்டது. இதனால் அவர் பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகினார். ஒருவருடத்திற்கு மேலாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். இப்போது அவர் தொகுதி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கே.டி.ராகவன் நடத்திய புதுமனை புகுவிழாவுக்கும் பாஜக தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்தினர். இருந்தாலும் தீவிர அரசியல் பக்கம் களப் பணிகளில் நேரடியாக ஈடுபடாமல் இருந்தார் கே.டி.ராகவன். இப்போது அவரை தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளராக நியமித்ததால் காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.