கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஈச்சனாரி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் புகழ்பெற்ற ஈச்சனாரி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மஹா கும்பாபிஷேகம் தமிழ்முறைப்படி நடைபெற்றது.
முன்னதாக, நேற்று நன்மங்கள இசை,திருமுறை பாராயணம்,நான்காம் கால வேள்வி பூஜை,5-ம் கால வேள்வி பூஜை நடைபெற்றது.
இன்று அதிகாலை நன்மங்கள இசை, திருமுறை பாராயணம் நடைபெற்றது. அதன் பிறகு கலைகள் நாடிகளின் வழியாக மூலத்திருமேனியை அடைதல் நிகழ்வு நடத்தப்பட்டது. இன்று காலை ஈச்சனாரி விநாயகர்
திருக்கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிசேகம் நடைபெறும்பொழுது, பிரம்மாண்ட டிரோன் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று மாலை சுவாமி திருவீதி உலா நடக்கிறது.பின்பு நாளை முதல் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது. இந்த மஹா கும்பாபிசேக விழாவில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், பிள்ளையார்பட்டி பிச்சை சிவனடியார், மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் மற்றும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்