கோவையில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான சிறந்த பேண்டு வாத்திய குழு போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் பேண்டு வாத்திய இசையுடன் நடத்திய அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை மற்றும் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கடந்த 25 வருடங்களாக பள்ளிகளுக்கு இடையிலான பேண்டு வாத்திய போட்டிகளை நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டுக்கான பேண்டு வாத்திய போட்டி அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இதில் 14 பள்ளிகளில் இருந்து பேண்டு வாத்திய குழு மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் வண்ண மயமான பேண்டு வாத்திய சீருடை அணிந்தபடி, போட்டியில் தங்கள் இசைத் திறமை, உடல் வலிமை மற்றும் ஒழுக்கத்தை நேர்த்தியாக வாசித்து அணிவகுப்பு நடத்தினர்.கலப்பு மற்றும் மாணவர் குழு,மாணவியர் குழு என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், கலப்பு பிரிவில் பிஷப் பிரான்சிஸ் பள்ளி ,மாணவியர் பிரிவில் அவிலா மெட்ரிக் பள்ளி, ,மாணவர் பிரிவில் ஏ.வி.பி. பள்ளி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.. தொடர்ந்து வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசுகள் வழங்கும் விழா காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.விழாவில் சிறப்பு விருந்தினராக, ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தர்வடிவேலு கலந்து கொண்டு சிறந்த குழுவினர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் ராம்குமார், செயலாளர் சவுண்டப்பன், திட்ட தலைவர் பாலசுப்ரமணியன், உட்பட ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.