கடந்த சில தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் வைரலாக பரவி வந்த நிலையில் தமிழகத்தில் பணியாற்றி வரும் பல்வேறு வட மாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதாகவும் இதனால் தொழில்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினர் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்வதாக தொழில்துறையினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் வடமாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து அது போன்ற வதந்திகளாக பரப்பப்படும் வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும், வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பீகார் அரசு இதுகுறித்து கள ஆய்வு மேற்கொள்வதற்காக தனிக்குழு ஒன்றை நியமித்து தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது. நேற்று முன்தினம் தமிழகம் வந்த அக்குழுவினர் சென்னையில் ஆய்வு மேற்கொண்டனர், பின்பு நேற்று திருப்பூரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த விவகாரம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சிச் செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு படை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உட்பட கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட தற்போது வருவாய் அலுவலர் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறைகளைவு குழுவை சேர்ந்த அரசு அலுவலர்களும் கோவை மாவட்ட தொழில்துறை அமைப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலாளர் பாலமுருகன், இன்று காலையில் இருந்து கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பீகார் மாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினோம் என தெரிவித்தார். முக்கியமாக சில வீடியோக்கள் வைரலானது அதன் மூலம் பொய்யான தகவல்களும் பரப்பப்பட்டது அந்த வீடியோ மற்றும் தகவல்களை பார்த்து வடமாநில தொழிலாளர்களிடையே அச்சம் இருந்தது. அந்த தகவல் பொய்யானது என தொழிலாளர்களிடத்தில் எடுத்துக் கூறினோம். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தொழில்துறையினருடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது கருத்துக்களையும் பெற்றுள்ளோம் என தெரிவித்தார். அந்த வீடியோக்களால் தொழிலாளர்கள் இடையே சிறிது அச்சம் இருந்தது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறை நிர்வாகமும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள் இதன் மூலம் அந்த தகவல்கள் பீகார் தொழிலாளர்களுடன் நடந்த சம்பவம் இல்லை என இங்குள்ள தொழிலாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என தெரிவித்தார்.