தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வரட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் வெயிலில் தாக்கம் காரணமாகவும், உணவு மற்றும் தண்ணீருக்காகவும் வனவிலங்குகள் அடர்ந்த காட்டை விட்டு வெளியேறி பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளிலும், மலைவாழ் மக்களின் குடியிருப்புகளில் அருகிலும் அவ்வப்போது காட்சியளிக்கின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் ரோட்டில் இருந்து கன்னிமாரா தேக்கு செல்லும் வழியில் புலி ஒன்று காட்டெருமையை துரத்தும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் டாப் ஸ்லிப்,
வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் தென்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து பல்வேறு வீடியோ பதிவுகளை எடுத்து வருகின்றனர். எனினும் ஆபத்தான வனவிலங்குகள் காட்டு வழிப் பாதையில் அடிக்கடி தென்படுவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் எனவும், வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.