கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவித்து உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இருளாயி என்ற தூய்மை பணியாளர், ஆசிட் ஊற்றி மருத்துவமனை கழிவறையை சுத்தம் செய்த போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு
மருத்துவமனையிலெயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இருப்பினும் தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தரமற்ற தூய்மை பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணிகளுக்கு தரமான பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.