கோவை – திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக் கணக்கான பயணிகள் வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக் கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த ஏ.எஸ்.எம் என்ற தனியார் பேருந்தில் 65 பயணிகளுடன் தொண்டாமத்துரைச் சேர்ந்த 32 வயதுடைய சுரேந்திரன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். அப்பொழுது தென்னம்பாளையம் அருகே வரும் பொழுது பேருந்தின் முன் பக்க கண்ணாடி அதிகமாக காற்று
வீசியதால் தானாக உடைந்து நொறுங்கி விழுந்தது, அப்பொழுது ஓட்டுநர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் பட்டு தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. அப்பொழுது பயணிகளின் உயிரைப் பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருள்படுத்தாமல் பேருந்தை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி பயணிகளின் உயிரை பாதுகாத்து காப்பாற்றினார். அவரை பாராட்டிய பேருந்து பயணிகள், அங்கு உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ஓட்டுநர் சுரேந்திரனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.