கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதி ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி, ஓணாப் பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத் துறையினரால் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், இந்த சிறுத்தை வடவள்ளி, ஓணாப்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் கால்நடைகளை தொடர்ந்து தாக்கி வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர். இதை அடுத்து, சிறுத்தையை பிடிக்க வனத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கேமராக்கள் பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். கூண்டுகள் வைத்தும் சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர்.
எனினும், சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டி வந்தது. இந்நிலையில், நேற்று களிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, வனத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, சிறுத்தை வலை மூலம் பிடிக்கப்பட்டது. பின்னர், மயக்க மருந்து கொடுத்து சிறுத்தை மருதமலை குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தையை பரிசோதித்ததில், அதற்கு தோல் நோய் மற்றும் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறுத்தையின் உடல் முழுவதும் கடித்த அடையாளங்கள் மற்றும் செப்டிசீமியா, இது மற்றொரு மாமிச உண்ணியுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக இருக்க வேண்டும். வலது மேல் மற்றும் கீழ் கோரை உடைந்து, ஈறுகள் வீங்கி, வளைவில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு உள்ளன.
மற்ற முடிவுகள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என வனதுறையினர் தெரிவித்து உள்ளனர்.