தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் மண்டலம் வாரியாக சென்று காவல்துறையினரிடம் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகரம் மற்றும் கோவை சரகத்திற்குட்பட்ட நான்கு மாவட்ட போலீசார் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அப்போது பணியிட மாற்றம் வேண்டி மனு அளித்தனர்.
மனுக்களை பெற்று கொண்ட பின்னர் காவல்துறையினர் மத்தியில் பேசிய அவர், கோவை மாநகரம், மாவட்டம், திருப்பூர் மாநகரம், மாவட்டம், மற்றும் நீலகிரி, ஈரோடு மாவட்ட காவல்துறையினர் குறைதீர் நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் இதில் 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றும் ஏற்கனவே இடம் மாறுதல் உள்ளிட்ட மனுக்கள்
கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என்றும் கூறியதுடன்
வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக உங்களது மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால் பணியின் போது குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து பரிசீலனை செய்யும்படி கொடுக்கப்பட்டிருந்த போலீசாரின் மனுக்களை ஆய்வு செய்து குறைகளை கேட்டார்.
மேலும் கோவை மாநகரம்,கோவை மாவட்டம்,திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றி பல்வேறு குற்ற வழக்குகளில் துரித நடவடிக்கை மேற்கொண்ட 51 காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வகுமதிகளையும் அவர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை ஐ.ஜி. செந்தில்குமார், டி,ஐ,ஜி, சரவணக்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் கோவை சரக காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்…..