பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும் கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பாஜகவின் எதிர்க்கட்சியினர் பலரும் ரபேல் வாட்ச் விவகாரம் குறித்து அவர்களது கருத்துக்களையும் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கான ரசீது கேட்டு பல்வேறு அரசியல் வாதிகளும் வலைத்தளவாசிகளும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதற்கான ரசீது தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்து வருகிறார். மேலும் இந்த வாட்சை வைத்து எம்பிக்களை பெற்று விட முடியும் என கோவையில் அவர் பேசியதும் தற்போது பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில் கோவை பெரிய கடைவீதி திமுக சார்பில் உக்கடம், லங்கா கார்னர் என மாநகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வாட்ச் ஒன்றை பெரியதாக அச்சிட்டு “டிக்..டிக்..டிக் பயந்துட்டியா… மல” என அண்ணாமலையின் பெயரை கூறாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.