கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இத்திருக்கோவிலில் மாமன்னர் திருமலை நாயக்கர் திருப்பணிகள் செய்து தேரோட்ட நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததாக புராண கால சான்றுகள் கூறுகிறது. இத்தகைய சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இத்திருக்கோவிலில் மாசி மகத் திருத்தேர்ப் பெருந்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினசரி மூலவர் அரங்கநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை தீபாராதனை, ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத சுவாமி அன்ன வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு. சிகரம் வைத்தாற் போல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று(6.3.23) நடைபெற்றது. நிகழ்ச்சியை யொட்டி அதிகாலை 5.30 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க திருத்தேருக்கு எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீ அரங்கநாதசுவாமியை
தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு பூஜைக்கு பின்னர் தாசர்கள் சங்கு ஊதிட தாரை தப்பட்டை முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்… திருத்தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாத ஸ்வாமி 4 மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின்னர் இரவு திருத்தேர் தேர்நிலையை அடைந்தது.திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்..