சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காலை முதல் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில், கோவை மாநகர காவல் துறை கோவை மாநகராட்சியுடன் இணைந்து யங் இந்தியா அமைப்பினருடன், போதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தபட்டது.இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரி மாணவர்கள், இணைந்து போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பாடல்கள், நாடகங்கள், ஆர்கெஸ்ட்ரா, மைம் ஷோ போன்றவற்றை அரங்கேற்றினர்.#drugfreekovai என்ற தலைப்பில் “எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம்
போதை” என்கின்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
முன்னதாக போதைப் ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டு, கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், உட்பட காவல் அதிகாரிகள், யங் இந்தியா அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,
இதுபோன்ற விழிப்புணர்வு கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் முதல் நாள் என்பதால் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சிலரை டிராஃபிக் பூங்காவிற்கு அழைத்துச் சென்று விழிப்புணர்வு அளிக்கப்பட்டதாகவும், இனிவரும் நாட்களில் தொடர்ந்து அறிவுரையுடன் அமலாக்கம் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.