கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் ஒண்டிப்புதூர் பகுதியில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த பள்ளி மாணவனை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் பின்புறத்தில் உள்ள கழுத்து மற்றும் வலது கை பகுதியில் வெட்டியுள்ளார். இதனைப்பார்த்து அருகிலிருந்தவர் அஞ்சி நடுங்க, சம்பவ இடத்தில் பள்ளி மாணவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.. இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு
விரைந்த போலீசார், உயிருக்கு போராடிய பள்ளி மாணவனை மீட்டு அவசர ஊர்தி மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பள்ளி மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.. இதனிடையே பள்ளி மாணவனை கொலை செய்ததாக சூலூர் காவல்
நிலையத்தில் இளைஞர் சரண்டைந்தார். போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது கொண்ட சிறுவன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருவதும், தனது தங்கையின் காதலுக்கு பள்ளி மாணவன் உடந்தையாக இருந்ததால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து கல்லூரி் மாணவனை கைது செய்த சிங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.