கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர்.
ஆழியார் அணையில் இருந்து உரிய நேரத்திற்கு தண்ணீர் திறப்பு, போதுமான அளவிற்கு பருவமழை போன்ற காரணங்களால் வயலில் நல்ல விளைச்சல் ஏற்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இன்று வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கினர். வயல்களில் முதலில் அறுக்கப்பட்ட நெற்கதிர்களை வயலில்
உள்ள காவல் தெய்வத்திற்கு பொங்கல் வைத்து நெற்கதிர்களை படையலிட்டு பயபக்தியுடன் விவசாயிகள் வழிபாடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து வயல்களுக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டு வயலில் நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். ஆண்டுதோறும் முதல் மற்றும் இரண்டாம் போகத்திற்கு நெல் அறுவடை செய்யும் போது மட்டும் கொள்முதல் நிலையங்களை திறக்காமல் நிரந்தரமாக கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், கேரளா போன்று நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் கொள்முதல் விலை தமிழக அரசு வழங்க வேண்டும், நெற்கதிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.