சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இதற்கு காரணம் இரு கம்யூனிஸ்ட்களுமே தாங்கள் ஏற்கனவே போட்டியிட்ட பழைய தொகுதிகளையே கேட்கின்றன. இதில் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மார்க்சிய கம்யூனிஸ்ட் ஏற்கனவே வெற்றிபெற்ற கோவை தொகுதியை தந்தே தீரவேண்டும் என மநீம தலைவர் கமல் கேட்கிறார். எனவே அவருக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் மார்க்சிய கம்யூனிஸ்டும் கோவை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
அதுபோல இந்திய கம்யூனிஸ்ட் கடந்த முறை வென்ற நாகை(தனி) தொகுதியை மீண்டும் கேட்கிறது. இந்த தொகுதியில் திமுக போட்டியிட விரும்புகிறது. இங்கு திமுக இளைஞரணி நிர்வாகி அல்லது டில்லி பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் ஆகிய 2 பேரில் ஒருவரை திமுக நிறுத்த முடிவு செய்து உள்ளது. எனவே இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதிகள் எவை என்பது முடிவு செய்யப்படவில்லை.
கோவை, நாகைக்கு பதில், கடலூர், மயிலாடுதுறை ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யும்படி திமுக கூறுகிறது. எனவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கோவை, நாகை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.