கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி குட முழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்கடவுளான முருகனின் கோவிலில் குட முழுக்கின் போது, தமிழில் மந்திரங்கள் ஓத அனுமதி கோரி, உப்பிலிபாளையத்தை சேர்ந்த டி.சுரேஷ் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், குடமுழுக்கின் போது, வேள்வி குண்ட நிகழ்வுகளில் வேள்வி ஆசிரியராக தமிழ் சைவ மந்திரங்கள் ஓதுவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அறநிலைய துறைக்கு மனு அளித்ததாக கூறியுள்ளார். தமிழில் குட முழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி வரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது .அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜர் ஆன சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், ஏற்கனவே இது போன்ற நடைமுறைகளை பின்பற்றி வருவதாக சுட்டிக்காட்டினார்.பழனி கோவில்,கோவை பட்டீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் 34 சிவாச்சாரியர்களை வைத்து தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும் அதே போல் மருதமலை கோவிலிலும் நடத்தப்படும் என தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பில் யாகசாலைக்கு வெளியே தனியாக மேடை அமைத்து ஓதுவார்கள் கச்சேரி மட்டுமே நடைபெறுவதாகவும், யாக சாலையை தமிழ் மந்திரங்கள் ஓதுவது கிடையாது என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இது அரசின் கொள்கை முடிவு என்றும்,இதில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றது அல்ல என தெரிவித்து, இதுகுறித்து வரும் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு இந்து சமய அறநிலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.