கோவையில் ஒரு தனியார் பஸ்சில் சர்மிளா என்ற இளம்பெண் டிரைவராக பணியாற்றி வந்தார். 3 மாதமாக இவர் பணியாற்றி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் இவர் பிரபலமானார். இவரது பஸ்சில் கூட்டமும் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த வாரம் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இந்த பஸ்சில் பயணித்து டிரைவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று அந்த பஸ்சில் பயணித்து டிரைவர் சர்மிளாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவர் பயணித்த சிறிது நேரத்தில் டிரைவர் சர்மிளாவை, அந்த பஸ்சின் உரிமையாளர் பணியில் இருந்து நீக்கினார். இதுபற்றி விசாரித்தபோது, கனிமொழி எம்.பி, இன்று சர்மிளாவுக்கு வாழ்த்து தெரிவிக்க வருவதாக ஏற்கனவே சர்மிளாவுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.சர்மிளா இந்த தகவலை பஸ் கம்பெனிமேலாளர் ரகு என்பவரிடம் கூறி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கனிமொழி எம்.பி. அந்த தனியார் பஸ்சில் ஏறி டிரைவர் சர்மிளாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்தார். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் கனிமொழி எம்.பியிடம் டிக்கெட் எடுக்கும்படி கூறி உள்ளார். எத்தனை பேர் வந்தீர்கள் என கனிமொழியிடம், நாலாந்தரமான நடவடிக்கையில் கெடுபிடியாக கேட்டு உள்ளார்.
இதைக் கவனித்த சர்மிளா, அவர்கள் திமுக எம்.பி. அவர்களிடம் இப்படி பேசலாமா என கேட்டு உள்ளார். இது குறித்து கண்டக்டர் பஸ் அதிபரிடம் போட்டு கொடுத்து விட்டார். உடனடியாக சர்மிளா பஸ் கம்பெனிக்கு அழைக்கப்பட்டார்.
உன்னுடைய பாப்புலாரிட்டிக்கு ஒவ்வொருவரையா அழைத்து செல்வதற்கு என் பஸ்தான் கிடைத்ததா, என சத்தம் போட்டு உள்ளார். இதை அறிந்த சர்மிளாவின் தந்தையும் பஸ் கம்பெனிக்கு சென்றார். அப்போது பஸ் அதிபர், உன் மகளை கூட்டிட்டு போ, இனி வேலை இல்லை என்ற தொனியில் கூறி விட்டார். இதனால் சர்மிளாவும், அவரது தந்தையும் வந்து விட்டனர்.
இது குறித்து சர்மிளா கூறும்போது, என் பாப்புலாரிட்டிக்காக நான் பஸ் ஓட்டவில்லை. யாரையும் நான் அழைக்கவில்லை. கனிமொழி எம்.பி. வருவதாக கூறினார்கள். இது குறித்து நான் பஸ் கம்பெனி மேலாளரிடம் கூறினேன். அவர் இன்று என்னிடம் கூறவில்லை என்கிறார். ஓனர் மரியாதைக்குறைவாக சத்தம் போட்டதுடன், உன் மகளை கூட்டிட்டி போ என்று கூறி விட்டார்.
மரியாதை இல்லாத இடத்தில் நாம் வேலை செய்ய வேண்டாம் என வந்துவிட்டேன். இன்று இரண்டு சிங்கிள் ஓட்டினேன். இதில் அரசியல் இருக்கிறது என கருதுகிறீர்களா என கேட்டபோது,அதேல்லாம் எனக்கு தெரியாது என சர்மிளா கூறினார்.