கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வந்த என்டிசி ஆலைகள் மூடப்பட்டன. இதனையடுத்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதிலும் என்டிசி பஞ்சாலைகள் முழுமையாக இயக்கப்படாமல் இருந்து வருகிறது. எனவே என்டிசி பஞ்சாலைகளை முழுமையாக இயக்கிட வலியுறுத்தி ஆலை தொழிலாளர்கள், பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளிடத்தில் மனு அளித்து வந்தனர், சில இடங்களில் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
இந்நிலையில் என்டிசி பஞ்சாலைகளை இயக்கிட வலியுறுத்தி பஞ்சாலைத் தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இன்று தமிழ்நாட்டில் உள்ள 7 என்டிசி பஞ்சாலைகளின் வாயில் முன்பும் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள முருகன் மில் வாயிலின் முன்பு கஞ்சி
காய்ச்சும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் HMS, AITUC, MLF, ATP, CITU, உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு கஞ்சி காய்ச்சி ஒன்றிய அரசிற்கு எதிராகவும் முடக்கப்பட்ட பஞ்சாலைகளை இயக்கிட வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் மூன்று ஆண்டுகளாக சட்டவிரோதமாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளத்தை வழங்கிட வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கிட வேண்டும், முழு சம்பளம் கொடுத்து பென்சன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும், மூன்று ஆண்டு போனஸ் மற்றும் இதர பயன்களை வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில், HMS ராஜாமணி, AITUC ஆறுமுகம், உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.