Skip to content
Home » கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்

கோவை தந்த உத்தரவாதம்…. 2026ல் திமுக ஆட்சி நிச்சயம்…… முதல்வர் மகிழ்ச்சி மடல்

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று எழுதி உள்ள உங்களில் ஒருவன் மடலில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தருவதை உறுதி செய்வதற்காக உங்களில் ஒருவனான நான் முதல்-அமைச்சர் என்ற முறையில் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்ய விருக்கிறேன் என்பதை கடந்த 22-ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அறிவித்தேன்.

அதன்படி, 5, 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்கினேன். மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். சொன்னதைச் செய்வோம் என்பதுதானே நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத்தந்துள்ள ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை பாடம்.

மேற்கு மண்டலத் திமுகவில் ஓட்டை விழுந்துவிட்டதுபோல அரசியல் களத்தில் சித்தரிக்கப்படுவதற்கு மாறாக, கொள்கை உரமிக்க மூத்த நிர்வாகிகளையும், லட்சிய நோக்கத்துடன் செயல்படும் இளைய பட்டாளத்தையும் கொண்ட கழகத்தின் கோட்டையாக மேற்கு மண்டலம் இருக்கிறது என்பதை, கோவையில் தரையிறங்கியதுமே உணர முடிந்தது. கோவையில் வழிநெடுக மக்களின் முகம் பார்த்து எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போலவே, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான என்னைப் பார்த்து மக்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி என்பது அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்பட்டு முகத்தில் பிரதிபலித்தது.

புன்னகைத்து, கையசைத்து, “அடுத்ததும் உங்க ஆட்சிதான்” என்று மனதார வாழ்த்தி மகிழ்ந்தனர். தொலைநோக்குப் பார்வை கொண்ட திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோஅப்போதெல்லாம் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காலத்திற்கேற்ற வளர்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குவது வழக்கம். ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் புது உத்வேகம் உருவாகியிருப்பதை உணர முடிந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.முக கூட்டணி வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு கோவையின்  10 தொகுதிகளும் உத்தரவாதம் அளித்திருப்பதாகவே கருதுகிறேன். மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சிதான் நிச்சயம்.

கோவையில் பொதுமக்களின் மகிழ்ச்சியையும் உடன்பிறப்புகளாம் உங்களின் உற்சாகத்தையும் கண்டேன். நெஞ்சம் நிறைந்தேன். மக்களின் பேரன்பில் கோவை மாவட்டக் களஆய்வு மகிழ்வாக அமைந்தது. அறிவிக்கப்பட்ட திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவோம் என்ற உறுதியை வழங்கி, நவ. 9, 10 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுப்பணியினை மேற்கொள்கிறேன். கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!