12 வயது பெண் குழந்தை மாயம் – இரண்டு தனி படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறை தேடி வருகின்றது
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சுதாகரன் மகள் 12 வயது சிறுமி ஸ்ரீநிதி. இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் அங்கு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதைத் தொடர்ந்து அந்த பேருந்து சென்ற பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்த போது அவர் எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை.
மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்தினர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சிறுமியை மாவட்ட காவல் துறையினர் மீட்டு உள்ளனர். தொடர்ந்து சிறுமி மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு மாநகர காவல் துறையினர் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சிறுமி போலீசாரிடம் தனது தம்பியை தேடி வந்ததாக தெரிவித்தாராம். இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள்.