Skip to content
Home » கோவை ஜிஎச்-ல் காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜை….

கோவை ஜிஎச்-ல் காத்திருப்போர் கூடத்திற்கான பூமி பூஜை….

  • by Senthil

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து காத்திருப்போர் கூடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், கோவை அரசு மருத்துவமனையில் புதிய காத்திருப்போர் கூடம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டும் பணிகள் பூமி பூஜை உடன் துவங்கியுள்ளது. மேலும், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கவும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை என்பது கோவை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சிறப்பு சிகிச்சைகளுக்காக பெருமளவு மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு மக்கள் காத்திருப்பதற்கான இட வசதி முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக பிரசவ சிகிச்சை பிரிவின் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகள் காத்திருப்பதற்கு இந்த காத்திருக்கும் கூடம் 20 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்கப்பட்டு உள்ளது. Jaica நிதியுதவியோடு இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு இன்னும் முழுமையாக செயல்படவில்லை. இதனை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். மாநில துறையினர் இந்த பணிகளை விரைவாக முடித்து தூய்மையான நிலையில் இந்த வளாகத்தை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவது மரபு சார்ந்த விஷயமாக இல்லை. மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்கு பதிலாக தனிப்பட்ட ரீதியில் தாக்குதல் செய்து வருகிறார். தமிழகத்தில் இருந்து தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனி மனித தாக்குதல்களை செய்கின்றனர். குறிப்பாக நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் தாக்கி பேசுகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் பெருகி உள்ளது. அதனால் தான் சரியான ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறுகிறோம். சென்னை பெருவெள்ளம் ஏற்பட்ட போது நிபுணர் குழு அமைக்கப்பட்டது. எந்த பிரச்சனை என்றாலும் அதற்கு உடனடியாக திமுக அரசு குழு அமைக்கும். ஆனால் செயல்படுவதில் எதுவும் இருக்காது. நிபுணர் குழு அமைத்த பின்பும் சென்னை வெள்ள பாதிப்பு அதே நிலையில் தான் உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் நிபுணர் குழு அமைப்பதில் குறைகளே கிடையாது. ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் இந்த ஆட்சியில் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பினை மாநிலங்களே மேற்கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள சமுதாயம் மற்றொரு மாநிலத்தில் குறைவாக இருக்கும்.  ரயில் விபத்துகளை பொறுத்த வரை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விபத்துகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில்நுட்ப கோளாறு என்றாலும் மனிதக் கோளாறு என்றாலும் அதை சரி செய்து மக்களை காப்பது அரசன் கடமையாகும். அதை மத்திய அரசு செய்து வருகிறது என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!