கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் விவசாயம் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வரத்து துவங்கியது. இதை அடுத்து தொடர்ந்து அப்பகுதியில் ஒற்றை யானை மற்றும் யானை கூட்டங்கள் நாள்தோறும் வந்து சேதப்படுத்தி செல்வது தொடர்கதை ஆனது. இதனை அடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வனத் துறையினரிடம் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதனை அடுத்து வனத் துறையினர் வனத்துறை ஊழியர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். யானை ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விட்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் தொண்டாமுத்தூர், தடாகம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தீனம் பாளையத்தில் விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியில் நேற்று இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் பயிரிட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.