கோவை, மதுக்கரை அருகே நாச்சிபாளையம் பகுதியில் பெண்ணின் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக
சம்பவம் குறித்து மதுக்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் பெயர் பத்மா (56). வழுக்குபாறை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருவதும்,இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என, இரு குழந்தைகள் உள்ளனர். இவரின் மகள் வழக்கறிஞராக இருப்பதாகவும், மகன் கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும், பள்ளிக்கூடம் செல்வதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறி அவர் கிளம்பி சென்றதாக தெரிகிறது. ஆனால் வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள, குப்பை எரிக்கும் இடத்தில் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்திலும் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.
