கோவை, குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (45) . இவர் நேற்று இரவு தனது காரில் வீட்டில் இருந்து ஆர்.புரம் சென்றார். டிபி ரோடு தலைமை தபால் நிலையம் அருகே சென்ற போது கார் முன் பக்கத்தில் இருந்து புகை வெளியேறியது. உடனடியாக கிருஷ்ணகுமார் காரை நிறுத்தி விட்டு இறங்கி சென்று பரிசோதித்த போது தீ மளமளவென பிடித்தது.
காரின் முகப்பு பகுதியில் தீ எரிந்ததை அறிந்த அந்த பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இதை அடுத்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். காரில் எலக்ட்ரிக் ஒயரில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ பிடித்து விட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.