கோவை, துடியலூர் பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோருடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஊசி போடும் அறை, மருந்து கிடங்கு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அறை ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன் மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் பார்வையிட்டார்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் புல் புதர் மண்டி கிடப்பதாகவும் விஷப் பூச்சிகள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு முன்பாக அவற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகங்களில் நேரில் பார்வையிட்டு அங்கு கிடைக்கக்கூடிய மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்துள்ளதாக கூறினார்.
தொழிலாளர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதை முற்றிலும் ஒழிக்கவும் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த ஆய்வு மேற்கொண்டதாகவும் மருத்துவமனையின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி தினசரி எவ்வளவு பேர் புறநானிகளாக சிகிச்சை பெறுகின்றனர் என்ற விபரத்தை கேட்டறிந்ததாகவும் கூறிய அவர், மருத்துவமனையை சுற்றிலும் தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தியதுடன் நாளைய தினமே அப்பகுதியை தூய்மைப்படுத்த மாவட்ட ஆட்சியரம்ருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.மேலும் கடந்த காலத்தில் இதுபோன்று யாரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில்லை எனவும் தொழிலாளர்கள் தான் முக்கியம் என்று முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.