நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் முதல் நிலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள 17160 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இப்பணிகளை ஆய்வு செய்ய, டெல்லியில் இருந்து ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவும் வந்துள்ளது. இந்த பணிகளில் ஏதேனும் இயந்திர
கோளாறுகள் இருந்தால் அவை சரிசெய்யப்படும்.இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், தெற்கு வட்டாட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு பிரதிநிதி உடன் இருந்தார். இப்பணிகள் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன கூடுதலாக பாதுகாப்பு பணிக்காக காவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.