நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. . கோவையை பொறுத்தவரை உக்கடம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர், டவுன்ஹால், ஆகிய பகுதிகளில் உள்ள மண்டபங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
கோவை, குனியமுத்தூர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அங்கு உள்ள தனியார் திருமண மண்டபம் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜானையொட்டி கோவை பல் சமய நல்லுறவு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் அனைத்து பள்ளிவாசல்கள் முன்பாகவும் தொழுகை முடித்து வெளியே வருவோருக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. பல் சமய நல்லுறவு இயக்க தலைவரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினருமான முகமது ரஃபிக் தலைமையில் அவ்வமைப்பினர் இரண்டு வாகனங்கள் மூலம் கவுண்டம்பாளையம், சாய் பாபா காலனி, பூ மார்க்கெட், உக்கடம், ஆத்துப்பாலம் என பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோருக்கு நீர்மோர் வழங்கினர்.