கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கைக்குழந்தை மற்றும் தனது தாயுடன் ரயில் நிலையம் அருகே வந்தார். வெயில் சுட்டெரித்ததால், அந்த இளம் பெண் தனது தாய், கைக்குழந்தையுடன் அங்குள்ள போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை நிழலில் வந்து வெயிலுக்கு ஒதுங்கி நின்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்
கிஷோர்குமார் (27) அந்த பெண் வைத்திருந்த கைக்குழந்தையை வாங்கி கொண்டு, இளம் பெண்ணை அங்கிருந்த இருக்கையில் சிறிது நேரம் அமர்ந்து ஆசுவாசப்பட்டுக்கொள்ளும்படி கூறினார். அந்த பெண்ணும் அங்கு உட்கார்ந்தார். அப்போது போலீஸ்காரர் தண்ணீர் வாங்கி கொடுத்தார்.இதையடுத்து அவரது தாய் வாங்கி வந்த உணவை இளம்பெண் சாப்பிட்டார். அது வரையிலும் சுமார் 20 நிமிடங்கள் குழந்தையை காவலர் கிஷோர்குமார் கையில் வைத்திருந்தார்.கடுமையான பணிக்கு மத்தியிலும் வெயலில் கைக்குழந்தையுடன் அவதிப்பட்ட ஒரு பெண்ணுக்கு போலீஸ்காரர் கிஷோர்குமார் செய்த மனிதநேயமிக்க உதவி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. போலீஸ்காரர்கள் என்றாரே எப்போதும் கடுமையாக இருப்பார்கள் என கூறுபவர்களுக்கு மத்தியில் கிஷோர்குமார் மனிதநேய காவலராக விளங்குகிறார் என கோவை மாவட்ட மக்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.