கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் வேலுமணி அண் கோ வெற்றி பெற்றதில் இருந்தே கோவை அதிமுக கோட்டை என அரசியல் பார்வையாளர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில் தான் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணி மாற்றப்பட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அவரது கடுமையான உழைப்பின் அடிப்படையிலேயே நகர்புற உள்ளாட்சி தேர்தலிலில் கோவை மேயர் பதவியை திமுக கைப்பற்றியது. 100 கவுன்சிலர்கள் கொண்ட கோவை மாநகராட்சியில் 97 பேர் தி.மு.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றி திமுகவின் தலைமைக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. திமுக மகத்தான வெற்றி பெற்ற கோவையின் மேயர் யார் ? என போட்டி எழுந்த நிலையில் மேயர் பதவிக்கு தற்போது மத்திய மண்டல தலைவராக உள்ள 46வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, கிழக்கு மண்டல தலைவராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி இருவரின் ஒருவர் தான் மேயர் என கூறப்பட்டது. மீனாலோகுவிற்கு அமைச்சர் எ.வா. வேலு பரிந்துரை செய்தார். மாவட்ட செயலாளர் மனைவி என்பதால் இலக்குமி இளஞ்செல்வி ஆசையில் இருந்தார். ஆனால் திமுக தலைமையோ வெற்றிக்கு காரணமாக அமைச்சர் செந்தில்பாலாஜி கைகாட்டும் நபர் தான் மேயர் என முடிவு செய்ய எதிர்பாராத விதமாக கோவையின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்பாராத விதமாக அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்தே கோவை திமுகவில் கோஷ்டி பூசல் தலை தூக்கியது. கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக சரியாக செயல்படவில்லை என எழுந்த புகாரின் அடிப்டையில் கல்பனாவை கட்டாய ராஜினாமா செய்ய திமுக தலைமை பணிந்தது. அடுத்த மேயர் என்கிற கேள்வி எழுந்த நிலையில் மீண்டும் மீனா லோகு மற்றும் இலக்குமி இளஞ்செல்வி ஆகியோர் கடுமையாக முயற்சி மேற்கொண்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் 29-வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரின் கணவர் ராமசந்திரன், 29-வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். எளியான குடும்பத்தை சேர்ந்த ரங்கநாயகியும் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான் என தகவல்கள் வெளியானது. தனது ஆதரவாளருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என அமைச்சர் ஏ.வா வேலு மற்றும் தனது மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என மாவட்ட செயலாளர் கார்த்திக் வருதத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறை சென்று விட்டதால் கோவை திமுகவில் கடுமையான கோஷ்டி பூசல் உச்சகட்டமாக உள்ளதாகவும் இந்த விவகாரத்தில் திமுக தலைமை கடுயைான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக நிர்வாகிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் அனுபப்பட்ட வந்த நிலையில் தான் ஜாமீனில் விடுதலையான அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் கோவை பொறுப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 பிளஸ் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளைகளிலும் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் அவர் செயல்பட ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில் கோவை திமுகவை பலவீனம் செய்யும் வகையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக கடந்த சில நாட்களாக உலாவரும் தகவல்களை திமுக தலைமை ரசிக்கவில்லை. இந்த செய்திகளுக்கு யார் காரணம்? திமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் நபர்கள் யார் யார்? என்பது குறித்து விசாரிக்குமாறு திமுக தலைமை உளவுத்துறை மற்றும் பென் டீமிடம் கேட்டுக்கொண்டது. இந்த விசாரணையில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தான் இது போன்ற செய்திகளுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. தனது குடும்பத்திற்கு பதவி கிடைக்காத விரக்தியில் உள்ள நிர்வாகி ஒருவரும், தன்னுடைய செல்வாக்கை நிலை நாட்ட முடியாத வருதத்தில் உள்ள அமைச்சர்கள் 3 பேரும் இந்த செய்திகளின் பிண்ணனியில் உள்ளதாகவும் அவர்கள் தான் கோவை திமுக நிர்வாகிகள் சிலரை தூண்டி விடுவதாக தகவல்கள் திமுக தலைமைக்கு கிடைத்துள்ளது. கோவையில் முதல்வர் ஸ்டாலின் 5, 6 தேதிகளில் கள ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இதன் எதிரொலியாக அடுத்த வாரத்தில் கோவை திமுகவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள் என்கின்றனர் அறிவாலயத்துக்காரர்கள்..