Skip to content

கோவை… ஆக்ரோஷமாக கார் கண்ணாடியை உடைத்த யானை…. .பரபரப்பு…

  • by Authour

கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தேக்கம்பட்டி, தாசம்பாளையம், சமயபுரம், நெல்லித்துறை, வச்சினம்பாளையம், பாலப்பட்டி, சிறுமுகை, லிங்காபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பல மாதங்களாகவே பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த யானை விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதம் செய்து வருவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

இதனால் விளைநிலங்களுக்கு காவலுக்கு செல்லும் விவசாயிகள் அங்கு செல்லவே அச்சமடைந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானை பாகுபலி மஸ்த்துடன் சுற்றி வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் காட்டு யானை பாகுபலி இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே உலா வந்தது.இதனால் அச்சாலை வழியே பயணித்த வாகன ஓட்டிகள் உடனடியாக தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

மேலும், சாலையில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கூச்சலிட்டதால் மெதுவாக நடந்து சென்ற காட்டு யானை பாகுபலி ஆக்ரோஷமாக அங்கிருந்த காரின் கண்ணாடியை தந்தங்களால் முட்டி உடைத்தது.

சுமார் ஒரு மணி நேரமாக சாலையிலேயே உலா வந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சற்று நேரத்தில் காட்டு யானை பாகுபலி தானாகவே வனத்திற்குள் சென்றது.

அதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவங்களை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவிட்டு அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பேசிய மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தற்போது பாகுபலியாக மஸ்த்துடன் சுற்றி திரிவதால் யானையை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அருகில் செல்லவோ, புகைப்படம், செல்பி எடுக்கவோ கூடாது.

மஸ்த்துடன் சுற்றித்திரிவதால் ஆக்ரோஷமாக காட்டு யானை பாகுபலி உள்ளது.எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இச்சாலையில் பயணிக்கும் போது மெதுவாகவும், எச்சரிக்கையுடனும்,அதே நேரத்தில் பாதுகாப்புடனும் பயணிக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

error: Content is protected !!