அதிக விலை கொடுத்து கேமராக்களை வாங்கி பின்னர் மேலும் விலை கொடுத்து லென்ஸ்கலை வாங்கி புகைப்படம் எடுப்பவர்கள் மத்தியில் தான் பயன்படுத்தும் செல்போனில் மிகக் குறைந்த விலையில் லென்ஸ்களை வாங்கி ஒளிப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து கோவை இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார்.
பாலு மகேந்திராவின் தீவிர ரசிகரான கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர் புகைப்பட கலையில் புதிய ட்ரெண்டை உருவாக்கி வருகிறார்.
கையிலும் தனது செல்போனிலும் பாலு மகேந்திராவின் முக அடையாளங்களை பதிந்துள்ள பாலச்சந்தர் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து கேமராக்களையும், லென்ஸ்களையும் வாங்கி எடுக்கும் புகைப்படங்களுக்கு இணையாக செல்போனிலேயே தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.
மொபைல் போட்டோகிராபர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பாலச்சந்தர் தான் பயன்படுத்தும் மொபைலில் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை உள்ள லென்ஸ்களை பயன்படுத்தி லட்சக்கணக்கான விலை உள்ள கேமரா லென்ஸ் ஒளிப்படங்களுடன் போட்டி போட்டு வருகிறார்.
மேலும் இவர் இந்த லென்ஸ்களை பயன்படுத்தி மிக நுண்ணிய உருவங்களை படம் பிடிக்கிறார். இதில் மிகச்சிறிய எறும்பின் படம், பட்டாம்பூச்சியின் படம் உள்ளிட்ட பலவகை பூச்சிகளின் படங்கள் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அத்துடன் இவரைப் போலவே லென்ஸ்கலை வாங்கி புகைப்படம் எடுக்கவும் தூண்டுகிறது.