கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு எனது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபருடன் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் செப் ஆக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 13-ந் தேதி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன் பின்னர் நாங்கள் செல்போன் மூலமாக பேசி பழகி வந்தோம். இந்தநிலையில் எனது வருங்கால கணவர் என்னை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி ஆனைக்கட்டிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள தங்கும் விடுதிக்கு நாங்கள் சென்றோம். அங்கு வைத்து அவர் மது குடித்தார். அப்போது என்னையும் மது குடிக்க வற்புறுத்தினார். ஆனால் நான் மது குடிக்க மறுத்து விட்டேன். அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர் என்னை சமாதானம் செய்தார். இதனை தொடர்ந்து நாங்கள் வீட்டிற்கு காரில் புறப்பட்டோம்.
வரும் வழியில் அவர் காரை நிறுத்தினார். பின்னர் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் விளைவாக நான் கர்ப்பமானேன். இதுகுறித்து நான் செல்போன் மூலமாக அவரிடம் தெரிவித்தேன். உடனடியாக என்னை திருமணம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் இப்போது என்னால் உன்னை திருமணம் செய்ய முடியாது. எனவே நீ பப்பாளி, அன்னாச்சி பழங்களை சாப்பிட்டு கருவை கலைத்து விடு என கூறினார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு அவர் சொன்னபடி கருவை கலைத்தேன்.
அதன்பிறகு அவர் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுத்தால் தான் உன்னை திருமணம் செய்வேன் என கூறி விட்டார். இதற்கு அவரது தாய், தந்தை ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். எனவே என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுக்கும் அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.