2026 சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார் படுத்தும் வகையில் அதிமுகவில் மாவட்டந்தோறும் களஆயவு ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னோடிகள் கலந்து கொண்டு தொண்டர்கள், நிர்வாகிகளின் கருத்துக்களை அறிந்து மேலிடத்துக்கு அறிக்கை அளித்து வருகிறார்கள்.
அந்த வைகயில், மதுரை, நெல்லை, திருப்பரங்குன்றம், கும்பகோணம் என பல மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டங்களில் முட்டல், மோதல், அடிதடி என பெரும் ரகளை நடந்தது. இதனால் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்த
நிலையில், அதிமுக நடத்தும் கள ஆய்வு கூட்டத்தை எதிர்க்கட்சிகள் கலவர ஆய்வுக்கூட்டம் என விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கோவை மாநகர் மாவட்டத்தின் அதிமுக கள ஆய்வு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, கலந்து கொண்டார். இந்த மாவட்ட அதிமுகவில் எடப்பாடி கோஷ்டி, வேலுமணி கோஷ்டி என 2 கோஷ்டிகள் செயல்படுகிறது.
மற்ற மாவட்டங்கள் போல இங்கும் பிரச்னை வந்துவிடக்கூடாது, அப்படியே கோஷ்டி மோதல் வந்தாலும் அது ஊடகம், பத்திரிகைகளில் வந்து விடக்கூடாது என்பதில் வேலுமணி உஷாராக இருந்தார். இதற்காக வேலுமணி பத்திாிகையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என அறிவித்து விட்டார்.
அத்துடன் பத்திரிகையாளா்கள் யாரும் உள்ளே வருகிறார்களா என கண்காணிக்க தனது ஆட்களை நியமித்து உஷாராக கண்காணிப்பு பணிகளை செய்தார். அதே நேரத்தில் கட்சியினர் யாரும் கூட்டத்தில் செல்போன்களில் படம் பிடிக்க கூடாது என்றும் உத்தரவு போட்டார்.