கோவை டவுன்ஹால் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய பிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன் ஆகிய நான்கு பேரை செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது… இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்ற போது கைது செய்யபட்டவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர். இந்த வழக்கில் பிரகாஷ் என்பவர் இந்து முன்னணி அமைப்பில் இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது செல்போனில் அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. மேலும் இதில் சூர்யா என்கின்ற முருகன் ஏற்கனவே இந்து முன்னணியில் இருந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர் புலன் விசாரணை நடைபெற்ற வருகிறது. மேலும் ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல்துறையினரே தொடர்பு கொள்ள செல்போன் எண்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றார்… பேட்டியின் போது மாநகர துணை ஆணையர் சந்தீஸ் உடனிருந்தார்.