கோவை நீதிமன்றம் அருகே கடந்த ஆண்டு ரவுடி கோகுல் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் பகுதியில் தொடர் கொள்ளை,கொலை , மற்றும் அடிதடி மோதல்கள் வழக்கில் தொடர்புடைய கோகுலின் நண்பர்களான 9 பேர் கொண்ட கும்பலை கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.இதில் ஏற்கனவே ஆறு பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய ரவீந்திரன், நந்தகுமார், சிராஜுதீன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் சிம்லாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில் அங்கு சென்ற கோவில்பாளையம் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ரவீந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாக கூறியதால் அதனை எடுப்பதற்காக போலீசார் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்து அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளனர். அதில் அவர்கள் இருவருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் சிகிச்சை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய கோவில்பாளையம் போலீசார் இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதித்தனர்.மற்றொருவரை சிறையில் அடைத்தனர்.