தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முழுவதும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை வந்த உதயநிதி ஸ்டாலின் நேரு விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் உள்ளிட்ட பணிகளுக்கு பூஜை போடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரண், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், வருவாய்த்துறை அதிகாரிகள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு, திட்டங்கள் குறித்து செயலாக்கம் குறித்து தெரிவித்தனர்.
முன்னதாக கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.