உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிய செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 362 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த விழாவிற்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது… 4 நாட்களில் இவ்வளவு பிரமாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறார் அண்ணன் அமைச்சர் செந்தில்பாலாஜி. அந்த ஆற்றல் அவருக்கு உண்டு. அதனால் தான் அண்ணன் செந்தில்பாலாஜி தேதி கேட்டால் உடனடியாக நான் தந்து விடுவேன். எந்த ஒரு நிகழ்ச்சியும் பிரமாண்டம் தான். அதிலும் திராவிட மாடலில் நிகழ்ச்சிகளை கட்டமைப்பவர் தான் அண்ணன் அமைச்சர் செந்தில்பாலாஜி. பொறுப்பு அமைச்சராக நியமித்திருந்தாலும் கரூரை விட கோவைக்கு அதிகம் கவனம் செலுத்தும் அண்ணன் செந்தில் பாலாஜியை இந்த மக்கள் கோவை செந்தில்பாலாஜி என ஏற்றுக்கொண்டு விட்டனர். அண்ணன் செந்தில்பாலாஜியும் கரூரையும் கோவையையும் தனது 2 கண்களைப்போல் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கோவை மக்களிடம் பெற்ற மனுக்களுக்காக கண்ட்ரோல் ரூம்மை திறந்து 1.60 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறார் அண்ணன் அமைச்சர் செந்தில்பாலாஜி. இவரின் செயல்பாட்டால் சென்னைக்கு அடுத்தபடியாக இருக்கும் கோவை வரும் காலங்களில் சென்னைக்கு இணையாகவும் இல்லை ஏன் சென்னையை விட வளர்ச்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.