கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம் கொடுத்திருந்ததாகவும் அதனை அவர்கள் திருப்பித் தராமல் மோசடி செய்ததால் தனது சாவிற்கு சாதிக் பாஷா ,கணேசன் மூர்த்தி, செந்தில் நாதன் ஆகிய மூவரும் காரணம் என தெரிவித்து இருந்தார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணேச மூர்த்தியை மட்டும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் சாதிக் பாஷா செந்தில்நாதன் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் கெங்கம்பாளையம் பகுதி சேர்ந்த பொதுமக்கள் சக்தி குமாரின் தற்கொலைக்கு நியாயம் கேட்டும், தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டூர் காவல் நிலையம் முன்பு முற்றுகையிட முயற்சித்தனர். இது குறித்து அறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தனர். இந்நிலையில் நாளைக்குள் தலைமறைவாகியுள்ள இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரித்தனர். அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர் இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.