ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது. பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 238 பயணிகள் இருந்தனர். 7 விமான சிப்பந்திகளும் இருந்தனர். அந்த விமானம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் கோவா டபோலிம் விமான நிலையத்துக்கு வந்து இறங்க வேண்டும். இந்த நிலையில் மாஸ்கோவில் இருந்து கோவா வந்த அந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவா விமான நிலைய இயக்குனருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு இமெயில் மூலம இந்த மிரட்டல வந்தது. அஜூர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து கோவா விமான நிலைய இயக்குனர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து அந்த விமானத்தை உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டது.
அந்த விமானம உஸ்பெகிஸ் தானில் அவசரமாக தரை இறங்கியது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விமானம் தரை இறங்குவதையொட்டி உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் சென்று சோதனை நடத்தினார்கள். ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது 2-வது நிகழ்வாகும். கடந்த 9-ந் தேதி ரஷியாவில் இருந்து கோவா வந்த இந்த நிறுவனத்தை சேர்ந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. புரளி என்பது தெரிந்தது. சோதனைக்கு பிறகு மறுநாள் அந்த விமானம் புறப்பட்டு சென்றது.