திருச்சி மாவட்டம், லால்குடி அருகே காட்டூர் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன். விவசாயியான இவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு அங்குள்ள 15 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதமாக தவறி விழுந்தது. இது குறித்து பேச்சியப்பன் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் அசோக், விஜய், அருண் பாண்டியன், பிரபு அர்ஜுன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு இருந்ததால் பசு மாட்டை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ஜேசிபி இயந்திர உதவியுடன் பசுமாட்டை உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.